பீரங்கி வாயில் இந்திய சிப்பாய்கள்
1756ம்
ஆண்டு கிளைவ் வடக்கே பிஸாகி யுத்தத்துக்குச் சென்றான். வங்காளம் சென்றதும்
1757ம் ஆண்டின் துவக்கத்தில் அங்கும் அவன் ஒரு பட்டாளம் திரட்டினான்.
அதில் நானூறு சிப்பாய்கள் சேர்ந்தனர். அதுவே வங்காளச் சேனையின் முதல்
பட்டாளம்.
பிஸாகி யுத்தம்
தீர்ந்ததும் வங்காளத்திலே பிரஞ்சுக்காரர்களுடன் ஆங்கிலேயர் யுத்தம்
மேற்கொள்ள வேண்டியதாயிற்று. சென்னையிலிருந்து சென்ற சிப்பாய்களை ஆங்கிலேயர்
ஏவினர். அச்சிப்பாய்களோ போரிட மறுத்தார்கள். ‘எங்களுக்கோ நெடுநாளாக
சம்பளாம் கொடுக்கவில்லை. வெகுமதியும் தரவில்லை’ என்பதே அச்சிப்பாய்களின்
வாதம்.
அதனைக் கேட்டு அச்சமுற்ற
ஆங்கிலேயத் தளபதி சிப்பாய்களுக்கு ஆசை வார்த்தை காட்டி சமாளித்தான். பிஸாகி
சண்டையில் எஜமானத் துரோகம் புரிந்து நாவப் பட்டம் பெற்ற மீர்ஜாபர் என்பவன்
சிப்பாய்களுக்கு பரிசளித்தான். ஆங்கில சிப்பாய்களுக்கு தலைக்கு நாற்பது
ரூபாயும் இந்திய சிப்பாய்களுக்கு ஆறு ரூபாய் மட்டும் கொடுக்க முன்வந்தான்.
இதனைக் கண்டு ஆத்திரமுற்ற இந்திய சிப்பாய்கள் ஆறு ரூபாயைப் பெற மறுத்து ஆங்கிலேயரைத் தாக்க முடிவு செய்தனர்.
இதனை
அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ‘சிப்பாய்களே சாந்தம் கொள்ளுங்கள். தலைக்கு
இருபது ரூபாய் கிடைக்கும்’ என்றனர். பின்னர் சிப்பாய்களின் சீற்றம் கொஞ்சம்
அடங்கியது. ஆனால் முழுத் தொகையும் அவர்களுக்கு வழங்கப்படாததால் மீண்டும்
சீறினார்கள் சிப்பாய்கள்.
கோபமடைந்த
ஆங்கிலேயர்கள், அச்சிப்பாய்களில் இருபத்து நான்கு பேரை பீரங்கி வாயில்
வைத்து சுட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அவர்களில் நால்வர் முன்னே
வந்து ‘அய்யா சண்டையிலே முன்னுக்கு நின்றோம். சாவிலும் முதலில் நிற்போம்’
என்றனர் கம்பீரமாக!
நல்லது என்றான்
மேஜர் மன்றோ. உடனே அந்நால்வரையும் பீரங்கி வாயில் வைத்து சுட்டனர்.
நால்வரின் உடலும் சின்னாபின்னமாயிற்று. நிணமும் சதையும் இரத்தமும்
எலும்பும் எங்கும் பறந்தன.
இது மற்ற
சிப்பாய்களிடம் ஆத்திரத்தைக் கிளப்பியது. அதுகண்ட ஆங்கில அதிகாரிகள் மேஜர்
மன்றோவிடம், ‘சிப்பாய்கள் யாவரும் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ளனர்.
நால்வரைச் சுட்டு வீழ்த்தியது போதும்’ என்று கூறினர்.
ஆனால்
மேஜர் மன்றோ செவிசாய்க்கவில்லை. எஞ்சிய இருபது சிப்பாய்களுக்கும் அக்கதியே
கிட்டியது. அவரது உடல்களும் துண்டு துண்டாகப் பறந்தது.
- ஜெகாதா
No comments:
Post a Comment